சிவமயம்
சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய
கைத்தல மாலை
ஒருவிகற்ப எதுகைக் கலிநிலைத்துறை
முன்ன மாலய னிந்திர னமரர்கண் முனிவர்
பன்னு மாரணம் போற்றுதற் கரியநம் பரமன்
மின்னு லாவிய சடாடவிக் கடவுள்வீற் றிருப்ப
வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 1
அன்ன மாயும்வெண் பிறைமருப் பேனமென் றாயு
முன்ன நான்முக னாரணன் றேடரு முதல்வன்
பின்னு வார்சடைப் பெருந்தகை பீடமாக் கோடற்
கென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 2
தன்னை மேவிவந் தனைபுரி பவன்செய றடுப்பா
னுன்னி மேல்வரும் வெந்திறற் கூற்றினை யுதைத்த
மன்னு மாலயற் கரியவன் வந்துவீற் றிருப்ப
வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 3
தன்னை நேர்வட காசிதென் கயிலைகே தார
மன்ன வார்வய லம்பல நமன்றமர் வராமற்
கன்னன் மாமதற் றெறும்விழிக் கடவுள்வீற் றிருப்ப
வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 4
கன்ன லாரமு தினுஞ்சுவை தருவதாய்க் காண்பா
னுன்னு மாலயற் கரியதா மொருமலை யுச்சி
மன்னு மோர்பவப் பிணிமருந் தௌ¤துவந் திருப்ப
வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 5
அன்னை யாகியின் னுயிர்க்குயி ராமரு ளாளன
பொன்னு மாரமு மணியுமா ரமுதமும் போல்வான்
றன்னை நாடொறுங் கண்டுகண் களிப்பதாச் சார்தற்
கென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 6
அன்ன மூர்பவன் முதலியோ ரபயமென் றடைய
முன்ன மாலமுண் டவர்துயர் களைந்தருண் முதல்வன்
மின்னு மாமழு வலமுடை வீரன்வீற் றிருப்ப
வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 7
பன்னு மாமறை தமிழினாற் பாடுநம் பிக்குப்
பொன்னு மாடையு மணிகளு மூர்தியும் பொருளு
மின்னு மீபவ னருளினான் மேவிவீற் றிருப்ப
வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 8
பின்னும் வார்திரைக் கடலின்வீழ்ந் தமிழ்கையிற் பிடிப்ப
முன்ன மோர்புணை யகப்படு முறைமைபோற் பிறப்பி
னின்னல் கூர்பொழு தெம்பிரான் வந்துவீற் றிருப்ப
வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 9
தன்னை யோர்பொழு திறைஞ்சுவான் கருதியித்தரைமேன்
மன்னு மாலயம் யாண்டுள தெனவல மராமற்
பொன்ன வாமலர்ச் சடையுடைப் புனிதன்வீற் றிருப்ப
வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 10
- கைத்தல மாலை முற்றிற்று -

No comments:
Post a Comment